4.8 பொது
“சிவன் எனும் ஓசை”
பியந்தைக்காந்தாரம்
72சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.
உரை
   
73விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.
உரை
   
74தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?
உரை
   
75வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர,
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி,
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.
உரை
   
76உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால்,
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.
உரை
   
77கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;
மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம்,                                                                                                  அழலே.
உரை
   
78நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?
உரை
   
79ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;
களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.
உரை
   
80மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;
விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.
உரை
   
81புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள,
விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்;
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம்,                                                                                                 இயல்பே!
உரை