4.10 திருஅதிகைவீரட்டானம்
காந்தாரபஞ்சமம்
94முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீர்
வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்;
திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.
உரை
   
95ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு-
கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும்
ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும்
கீறின உடையினர்-கெடில வாணரே.
உரை
   
96விடம் திகழ் கெழு தரு மிடற்றர்; வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர்-முழுதும் வெண் நிலாப்
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய்புனல்
கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே.
உரை
   
97விழும் மணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர்
கொழு மணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழு மணிமிடற்றினர்; செய்யர்; வெய்யது ஓர்
கெழு மணி அரவினர்-கெடில வாணரே.
உரை
   
98குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்,
மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர்-கெடில வாணரே.
உரை
   
99அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்
மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை-
நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.
உரை
   
100கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து
“இழிந்தவர் ஒருவர்!” என்று எள்க, வாழ்பவர்-
வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள்
கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே.
உரை
   
101கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேது உற,
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற,
கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே,
கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே.
உரை
   
102வெறி உறு விரிசடை புரள வீசி, ஓர்
பொறி உறு புலி உரி அரையது ஆகவும்,
நெறி உறு குழல் உமை பாகம் ஆகவும்,
கிறி பட உழிதர்வர்-கெடில வாணரே!
உரை
   
103பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.
உரை