4.19 திருஆரூர்
சீகாமரம்
187சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை;
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.
உரை
   
188பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில்
புக்க ஊர்ப் பிச்சை ஏற்று, உண்டு, பொலிவு உடைத்து ஆய்க்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த, கோவணத்தோடு
அக்கு அணிந்த, அம்மானை-நான் கண்டது ஆரூரே.
உரை
   
189சேய உலகமும் செல் சார்வும் ஆனானை,
மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை,
வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின்
ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே.
உரை
   
190ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர,
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.
உரை
   
191தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி,
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.
உரை
   
192எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே.
உரை
   
193போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ,
ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர்
ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே.
உரை
   
194வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை,
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து
அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே.
உரை
   
195கார முது கொன்றை கடி நாறு தண் என்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன்,
பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு
ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே.
உரை
   
196தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன்,
கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை,
ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.
உரை
   
197மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால்,
துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்-
செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று-
அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே.
உரை