4.22 கோயில்
திரு நேரிசை
கொல்லி
218செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!
உரை
   
219ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்;
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே!
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே!
உரை
   
220சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார்; உடை தலையில் உண்பதும், பிச்சை ஏற்று;
கடி கொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று (வ்) அனல்-எரி ஆடும் ஆறே!
உரை
   
221பை அரவு அசைத்த அல்குல், பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக் கண்ணினாளும் மாலும் ஓர் பாகம் ஆகி,
செய் எரித் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல்- எரி ஆடும் ஆறே!
உரை
   
222ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா எறிக்கும் சென்னிப்
பூதனார்; பூதம் சூழப் புலி உரி-அதளனார், தாம்;
நாதனார்; தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண் குழைகள் தாழக் கனல்-எரி ஆடும் ஆறே!
உரை
   
223ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி,
பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே!
உரை
   
224முதல்-தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி,
மதக்களிற்று உரிவை போர்த்த, மைந்தரைக் காணல் ஆகும்;
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக் கனல்-எரி ஆடும் ஆறே!
உரை
   
225மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே!
உரை
   
226விருத்தனாய், பாலன் ஆகி, விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார்; நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழக்
கருத்தனார்; தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்த மா மேனி தன்னோடு அனல் -எரி ஆடும் ஆறே!
உரை
   
227பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி,
காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி;
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே-
நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே!
உரை
   
228மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி,
நெதியன் தோள் நெரிய ஊன்றி, நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த,
மதியம் தோய், தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று(வ்) அனல்-எரி ஆடும் ஆறே!
உரை