4.24 திருஅதிகைவீரட்டானம்
கொப்பளித்த திரு நேரிசை
239இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.
உரை
   
240கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி,
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து,
செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே
உரை
   
241விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த,
சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி,
உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.
உரை
   
242கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர்-வண்டு பண் பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.
உரை
   
243நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி,
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம்,
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த,
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.
உரை
   
244வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த,
பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்-
சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக,
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே.
உரை
   
245சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி,
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி,
மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை,
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே.
உரை
   
246நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடைமேலும் வைத்து,
பாகம் கொப்பளித்த மாதர் பண் உடன் பாடி ஆட,
ஆகம் கொப்பளித்த தோளார்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
247பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த,
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்),
இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
248தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல்,
கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக-
வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.
உரை