4.25 திருஅதிகைவீரட்டானம்
திருநேரிசை
249வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.
உரை
   
250பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.
உரை
   
251ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்)
ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
252துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று,
“விருத்தி தான் தருக!” என்று வேதனை பலவும் செய்ய,
வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.
உரை
   
253பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்
துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்),
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்)
அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
254வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!-
கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே;
சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல்
அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே.
உரை
   
255நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
256எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.
உரை
   
257ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.
உரை
   
258தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து
அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.
உரை