4.26 திருஅதிகைவீரட்டானம்
திருநேரிசை
259“நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி!” என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
260பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
261நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
262தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்;
இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான்
அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!
உரை
   
263அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே!
உரை
   
264உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
265கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!
உரை
   
266மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
267பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே!
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்;
துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
268திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான்,
அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!
உரை