4.27 திருஅதிகைவீரட்டானம்
திருநேரிசை
269மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா
முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்-
தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்
அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.
உரை
   
270சூடினார், கங்கையாளை; சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள், நங்கையாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார், சாமவேதம்; பாடிய பாணியாலே
ஆடினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.
உரை
   
271கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார்- கெடில வேலி அதிகைவீரட்டனாரே.
உரை
   
272மறி படக் கிடந்த கையர், வளர் இள மங்கை பாகம்
செறி படக் கிடந்த செக்கர்ச் செழு மதிக்கொழுந்து சூடி,
பொறி படக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்துஅழல வீக்கி,
கிறிபட நடப்பர்போலும்-கெடில வீரட்டனாரே.
உரை
   
273நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த,
தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி,
அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே.
உரை
   
274புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய், பலா சங்க்கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண் நீறு அணிந்தவர்-மணி வெள் ஏற்றுத்
துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே.
உரை
   
275நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர்
கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்;
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
276காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகாா
ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே.
உரை
   
277தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி,
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்)
ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே.
உரை