4.30 திருக்கழிப்பாலை
திருநேரிசை
294நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
295விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
296வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
297அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
298கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார்
பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார்
ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
299உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார்
நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
300ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார்
ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார்
வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
301கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
302சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்)
எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை
   
303மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை