4.31 திருக்கடவூர் வீரட்டம்
திருநேரிசை
304பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.
உரை
   
305மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில்,
விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?
பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.
உரை
   
306பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா
ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.
உரை
   
307பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே.
உரை
   
308தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி,
விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்;
மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே!
உரை
   
309பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்;
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!
உரை
   
310மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!
உரை
   
311பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்;
“உற்றலால் கயவர் தேறார்” என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;
எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!
உரை
   
312சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய்,
பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.
உரை
   
313முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்-
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய,
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.
உரை