4.36 திருப்பழனம்
திருநேரிசை
354ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
355போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
356கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே
உரை
   
357நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய
பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி;
ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
358ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.
உரை
   
359ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
360ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
361கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி
ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்;
பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
362கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.
உரை
   
363குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின்
இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே.
உரை