4.38 திருஐயாறு
திருநேரிசை
374கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.
உரை
   
375பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார்
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
உரை
   
376உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
உரை
   
377தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.
உரை
   
378வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார்
கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார்
ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
உரை
   
379சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
உரை
   
380பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.
உரை
   
381ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
உரை
   
382பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
உரை
   
383இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
உரை