4.42 திருத்துருத்தி
திருநேரிசை
414பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
415சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ!
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த
சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
416உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ!
கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து,
பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.!
உரை
   
417ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ,
வான் தலைத் தேவர் கூடி,”வானவர்க்கு இறைவா!” என்னும்
தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
418உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ!
கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
419அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள்
பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
420“பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன்” என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
421சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா;
தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ!
சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும்
தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!
உரை
   
422குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்!
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே!
உரை
   
423பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!
உரை