நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும் துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக் கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.
ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர் “சோத்தம், எம்பெருமான்!” என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல, தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.