4.53 திருஆரூர்
திருநேரிசை
508குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.
உரை
   
509நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர, நாகம்; வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும், ஆரூரனார்க்கே.
உரை
   
510தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப்
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.
உரை
   
511நஞ்சு இருள் மணி கொள் கண்டர்; நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே.
உரை
   
512“எம் தளிர் நீர்மை கோல மேனி” என்று இமையோர் ஏத்த,
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு,
தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.
உரை
   
513வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்,
ஊன் அகம் கழிந்த ஓட்டில்; உண்பதும், ஒளி கொள் நஞ்சம்-
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே.
உரை
   
514அஞ்சு அணை கணையினானை அழல் உற அன்று நோக்கி,
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு(வ்),
அஞ்சு அணை அஞ்சும் ஆடி, ஆடு அரவு ஆட்டுவார் தாம்,
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டாரே.
உரை
   
515வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப்
பிணங்கு உடைச் சடையில் வைத்த பிறை உடைப் பெருமை அண்ணல்,
மணம் கமழோதி பாகர்-மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே.
உரை
   
516நகல் இடம் பிறர்கட்கு ஆக, நால்மறையோர்கள் தங்கள்
புகல் இடம் ஆகி வாழும் புகல் இலி-இருவர் கூடி
இகல் இடம் ஆக, நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி,
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே.
உரை
   
517ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.
உரை