4.55 திருவலம்புரம்
திருநேரிசை
528தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழுங்காலை,
தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது, அடி வணங்கி, எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம் புரத்து அடிகள் தம்மைக்
கொண்டு, நல் கீதம் பாடக் குழகர் தாம் இருந்த ஆறே!
உரை
   
529மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை,
பிடிக் களிறு என்னத் தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்
தொடுத்த நல் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்த,
வடித் தடங்கண்ணி பாகர்-வலம்புரத்து இருந்த ஆறே!
உரை
   
530தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்தி,
ஆன் இடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி,
வான் இடை மதியம் சூடும் வலம் புரத்து அடிகள் தம்மை
நான் அடைந்து ஏத்தப் பெற்று, நல்வினைப் பயன் உற்றேனே.
உரை
   
531முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு, மொய் சடைகள் தாழ,
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி,
புளை கயப் போர்வை போர்த்து, புனலொடு மதியம் சூடி,
வளை பயில் இளையர் ஏத்தும் வலம் புரத்து அடிகள் தாமே.
உரை
   
532சுருள் உறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த,
இருள் உறு கதிர் நுழைந்த இளங் கதிர்ப் பசலைத் திங்கள்
அருள் உறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த,
மருள் உறு கீதம் கேட்டார் வலம் புரத்து அடிகளாரே.
உரை
   
533நினைக்கின்றேன், நெஞ்சு தன்னால் நீண்ட புன் சடையினானே!
அனைத்து உடன் கொண்டு வந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி;
புனை(க்)கின்றேன், பொய்ம்மை தன்னை; மெய்ம்மையைப் புணர மாட்டேன்;
எனக்கு நான் செய்வது என்னே, இனி? வலம் புரவனீரே!
உரை
   
534செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம் பழம் இனிய நாடி
தம் கயம் துறந்து போந்து, தடம் பொய்கை அடைந்து நின்று,
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங் கனி அழுங்கினார் அம்
மங்கல மனையின் மிக்கார் வலம் புரத்து அடிகளாரே!
உரை
   
535அருகு எலாம் குவளை, செந்நெல், அகல் இலை ஆம்பல் நெய்தல்;
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும், படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும், வலம் புரத்து அடிகளாரே!
உரை
   
536கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும் காணான்;
திரு வரை அனைய பூமேல் திசை முகன் அவனும் காணான்;
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார், ஓங்கி வந்து(வ்)
அருமையின் எளிமை ஆனார் அவர், வலம்புரவனாரே.
உரை
   
537வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ், அன்று,
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி,
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.
உரை