4.57 திருஆவடுதுறை
திருநேரிசை
548மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
“அஞ்சல்!” என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!
உரை
   
549நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்;
ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!
உரை
   
550கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய்
ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்-
பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும்
அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!
உரை
   
551“பெருமை நன்று உடையது இல்லை” என்று நான் பேச மாட்டேன்;
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்;
கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்;
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
உரை
   
552துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய்
மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்)
அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!
உரை
   
553கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!
உரை
   
554செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்;
குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்;
நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்;
அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!
உரை
   
555கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
உரை
   
556நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட,
கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகாா
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.
உரை
   
557மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.
உரை