4.60 திருப்பெருவேளூர்
திருநேரிசை
578மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை,
கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை,
பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை,
நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.
உரை
   
579நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும்
பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை,
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே,
உரை
   
580குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை,
பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை,
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே.
உரை
   
581மைஞ் ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழு ஒன்று ஏந்திக்
கைஞ் ஞவில் மானினோடும் கனல்-எரி ஆடினானை,
பிஞ்ஞகன் தன்னை, அம் தண் பெருவேளூர் பேணினானை,
பொய்ஞ் ஞெக நினையமாட்டாப் பொறி இலா அறிவினேனே!
உரை
   
582ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை,
வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை,
பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை,
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே.
உரை
   
583கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை,
கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை,
பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை,
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே.
உரை
   
584சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்
முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய
பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை,
மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே.
உரை
   
585முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை,
வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை,
பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை,
அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே.
உரை
   
586விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்)
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்;
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே.
உரை
   
587பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை,
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே.
உரை