4.66 திருநாகேச்சுரம்
திருநேரிசை
639கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்;
பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்;
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
640வேடு உறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்;
காடு உறு பதியர் போலும்; கடிபுனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும்; தீவினை தீர்க்க வல்ல
நாடு அறி புகழர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
641கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்;
பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்;
சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
642கொம்பு அனாள் பாகர் போலும்; கொடி உடை விடையர் போலும்;
செம்பொன் ஆர் உருவர் போலும்; திகழ் திரு நீற்றர் போலும்;
“எம்பிரான்! எம்மை ஆளும் இறைவனே!” என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
643கடகரி உரியர் போலும்; கனல் மழுவாளர் போலும்;
பட அரவு அரையர் போலும்; பாரிடம் பலவும் கூடிக்
குடம் உடை முழவம் ஆர்ப்ப, கூளிகள் பாட, நாளும்
நடம் நவில் அடிகள் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை
   
644பிறை உறு சடையர் போலும்; பெண் ஒரு பாகர் போலும்;
மறை உறு மொழியர் போலும்; மால், மறையவன் தன்னோடு,
முறை முறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
645வஞ்சகர்க்கு அரியர் போலும்; மருவினோர்க்கு எளியர் போலும்;
குஞ்சரத்து உரியர் போலும்; கூற்றினைக் குமைப்பர் போலும்;
விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
646போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்;
வேகம் ஆர் விடையர் போலும்; வெண் பொடி ஆடும் மேனிப்
பாகம் மால் உடையர் போலும்; பருப்பத வில்லர் போலும்;
நாகம் நாண் உடையர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
647கொக்கரை, தாளம், வீணை, பாணி செய் குழகர் போலும்;
அக்கு அரை அணிவர் போலும்; ஐந்தலை அரவர் போலும்;
வக்கரை அமர்வர் போலும்; மாதரை மையல் செய்யும்
நக்க(அ)ரை உருவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை
   
648வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்;
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்;
வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே
நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
உரை