4.72 திருஇன்னம்பர்
திருநேரிசை
697விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
698பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்;
துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்;
மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்;
என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
699மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்;
பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்;
செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்;
எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
700விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்;
கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
701அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்;
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்;
வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்;
எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
702கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்;
துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்;
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
703பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்;
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்;
உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
704காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்;
வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்;
கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை
ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
705காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்;
பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்;
ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
உரை
   
706ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.
உரை