4.74 பொது
“நினைந்த” திரு நேரிசை
716முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை
   
717முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச
வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை
   
718கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை,
இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை,
பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை
   
719செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு
ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
உரை
   
720கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு
ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக
நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
உரை
   
721கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்,
விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற
நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
உரை
   
722நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை
   
723பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும்
மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை
   
724விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை,
கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை,
எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை
   
725உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்-
அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரை