4.75 பொது
தனித் திரு நேரிசை
726தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!
உரை
   
727பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே!
என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள்
சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே!
நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!
உரை
   
728கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
“உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி” என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!
உரை
   
729உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி,
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.
உரை
   
730வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா;
வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்;
வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று
வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!
உரை
   
731உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை,
உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி
எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?
உரை
   
732மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன்
வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்;
சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!
உரை
   
733அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை!
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை,
“எங்கு உற்றாய்?” என்ற போதா, “இங்கு உற்றேன்” என் கண்டாயே!
உரை
   
734வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
“கள்ளரோ, புகுந்தீர்?” என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
“வெள்ளரோம்!” என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.
உரை
   
735பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்;
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!
உரை