4.76 பொது
தனித் திரு நேரிசை
736மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்;
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப்
பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!
உரை
   
737மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி,
பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி,
தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு,
செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!
உரை
   
738“எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு
எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால்,
எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?
உரை
   
739காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக,
வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக,
நேயமே நெய்யும் பாலா, நிறைய நீர் அமைய ஆட்டி,
பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே.
உரை
   
740வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி
“அஞ்சல்!” என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே!
நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்;
நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?
உரை
   
741நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்;
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க,
நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே!
உரை
   
742விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே
வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே,
உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும்,
கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?
உரை
   
743ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்,
ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,-
தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய
ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!
உரை
   
744நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம்
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்!
சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக்
குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!
உரை
   
745நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா;
அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்;
படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை;
கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!
உரை