4.85 திருச்சோற்றுத்துறை
திருவிருத்தம்
812காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
உரை
   
813வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
உரை
   
814அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான்,
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன்,
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
உரை
   
815ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!
உரை
   
816கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை
நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்;
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்,
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.
உரை
   
817வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!
உரை
   
818ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!
உரை
   
819அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
உரை
   
820கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
உரை
   
821இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
உரை