4.87 திருப்பழனம்
திருவிருத்தம்
833மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!
உரை
   
834சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில்
மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப்
பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான்
உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
835ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும்
கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே-
பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே!
உரை
   
836எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்;
உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை;
பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்-
தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
837முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே-
மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே!
உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
838ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
839மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே-
உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே;
பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
840ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு
பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
841போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை;
ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை
   
842அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்
கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே-
படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல்
உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
உரை