4.96 திருச்சத்திமுற்றம்
திருவிருத்தம்
933கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத்
தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
934காய்ந்தாய், அநங்கன் உடலம் பொடிபட; காலனை முன்
பாய்ந்தாய், உயிர் செக; பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய், அடியேற்கு அருளாய்! உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
935பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப,
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி!
அத்தா! அடியேன் அடைக்கலம் கண்டாய்-அமரர்கள் தம்
சித்தா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
936நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று
அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்;
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
937கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன்; கருப்புவியில்-
தெருவில் புகுந்தேன்; திகைத்த(அ)அடியேனைத் திகைப்பு ஒழிவி!
உருவில்-திகழும் உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
938வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதிவை! ஈங்கு இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்?-
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
939விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
940இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு, இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய், நீலகண்டா!
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்!-
திகழ்ந்த திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
941தக்கு ஆர்வம் எய்திச் சமண் தவிர்ந்து உன் தன் சரண் புகுந்தேன்;
எக் காதல், எப் பயன், உன் திறம் அல்லால் எனக்கு உளதே?-
மிக்கார் திலையுள் விருப்பா! மிக வடமேரு என்னும்
திக்கா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை
   
942பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன் பொன்முடி தோள்
இற, தாள் ஒருவிரல் ஊன்றிட்டு, அலற இரங்கி, ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய்; கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
உரை