4.97 திருநல்லூர்
திருவிருத்தம்
943“அட்டுமின், இல் பலி!” என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.
உரை
   
944“பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு” என்று உழல்வார்
நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று,
கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே.
உரை
   
945பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து,
நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ?
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே.
உரை
   
946செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.
உரை
   
947வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ;
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்;
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.
உரை
   
948தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே.
உரை
   
949நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
“கீள் கொண்ட கோவணம் கா!” என்று சொல்லிக் கிறிபடத் தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே?
உரை
   
950அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல்
நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்-
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.
உரை
   
951மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை,
அன்னியர் அற்றவர், “அங்கணனே, அருள் நல்கு!” என்பரே.
உரை
   
952திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல்,
குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி,
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.
உரை
   
953செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான்,
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே?
உரை