அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என் புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?- சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர் உக்க அந்தி நாடகக் கால்; நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த காடு அகக் கால்; கணம் கைதொழும் கால்; எம் கணாய் நின்ற கால்; ஆடகக்கால்-அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.