4.100 திருஇன்னம்பர்
திருவிருத்தம்
966மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
967பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
968சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு
இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
969ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள்
வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
970அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
971கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
972போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை
   
973பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; “கூட ஒண்ணாச்
சயம்பு” என்றே, “தகு தாணு” என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.
உரை
   
974அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
“சய சய” என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.
உரை
   
975தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.
உரை