4.102 திருஆரூர்
திருவிருத்தம்
986வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி,
தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்,
சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே!
உரை
   
987ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர் அகத்து அடக்கிப்
பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்,
நார் ஊர் நறுமலர் நாதன், அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால்-திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே!
உரை
   
988பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே!
உரை
   
989துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து,
முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி,
பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே.
உரை
   
990கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க,
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை, “யாது ஒன்று?” நான் உன்னை வேண்டுவனே.
உரை
   
991கொடி, கொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கோடு,
இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர்; எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும், அம் தவளப்-
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும், நந்தி புறப்படினே.
உரை
   
992சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில்
குங்கிலியப்புகைக்கூட்டு என்றும் காட்டி! இருபதுதோள்
அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே.
உரை