4.103 திருநாகைக்காரோணம்
திருவிருத்தம்
993வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!
உரை
   
994கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!
உரை
   
995தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!
உரை
   
996பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்;
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!
உரை
   
997செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார்
வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக்
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.
உரை
   
998பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே!
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!-
மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?
உரை
   
999சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!
உரை
   
1000வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே!
எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்:
கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை-
நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!
உரை
   
1001“கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திருமலை” என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்
பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே.
உரை