4.105 திருப்புகலூர்
திருவிருத்தம்
1009தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.
உரை
   
1010பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்!
புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே!
என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!
உரை
   
1011பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே!
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!-
என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்!
உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே!
உரை
   
1012ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும்,
காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத்
தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க்
கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.
உரை