4.107 திருக்கடவூர்
திருவிருத்தம்
1016மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்-
இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி,
சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1017பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1018கரப்பு உறு சிந்தையர் காண்டற்கு அரியவன்; காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன்; நீள் புனல் கங்கையும், பொங்கு அரவும்,
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்; காலனைப் பண்டு ஒரு கால்
உரப்பிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1019மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை,
கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1020குழை(த்) திகழ் காதினன்; வானவர்கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆர் உயிர் கொள்ள வந்த,
தழல் பொதி மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உழக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1021பாலனுக்கு ஆய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி, அரு முனிக்கு ஆய்,-
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1022படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா
உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்;
சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா
உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1023வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல்
பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்;
கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம்
உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே
உரை
   
1024கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய்,
வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்),
ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே.
உரை
   
1025தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
உரை