பாடல் எண் : 1 - 3
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென்றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
3
பொ-ரை:அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ (இடுகாட்டில்) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்.
கு-ரை:அரித்து சிரித்து என்பன முறையே அரிச்சு சிரிச்சு என மருவின. "அரிச்சிராப்பகல்" எனத் தொடங்கும் திருக்குறுந்தொகையிலும் (தி.5.ப.85.பா.3) இவ்வாறு வருதல் காண்க. முதலும் மூன்றுமாம் அடிகளில் உற்ற என்னும் பெயரெச்சமும் உற்று என்னும் வினையெச்சமும் அமைந்தன. இரண்டாமடியில் சுற்ற என்பது வினையெச்சம்.
இப்பாடல், இறக்கும்முன் பிறப்பை நீக்கிக் கொள்ளும் நெறியை உணர்த்துகின்றது. சிற்றம்பலம் அடைவார்க்கு வினையால் அரிப்புண்டலும் இறப்பொடு பிறப்பும் இல்லையாம் என்றபடி.