பாடல் எண் : 1 - 5
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.
5
பொ-ரை:உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய அத்திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர்.
கு-ரை: ஊன் - உடல். ஆகுபெயர். நிலாவி - விளங்கி, நிலைபெற்று. உயிர்க்கும் பொழுது - மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும்காலம். நாதன் - உடையான். தேன் - சிவானந்தம். வான் - விண்ணுலகு அன்று; சிவலோகம். ஊனில் ஆவி என்றும், ஊன் நிலாவி என்றும் பிரித்துரைக்கலாம். வானிலாவி என்புழியும் அவ்வாறே கொள்ளலாம். முதல்வன் திருவருளை மறவாதவர்க்கே பேரின்பம் எய்தும் என்பது கருத்து.