பாடல் எண் : 1 - 6
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.
6
பொ-ரை: ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம்; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞானமூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே, ஏனையோரைச் செறுதற்கு வல்லகாலன் அணுக மாட்டான்.
கு-ரை:சிட்டர் - அறிவர்; ஞானியர்; தில்லைவாழந்தணர். சிட்டன் - ஞானமூர்த்தியாகிய நடராசப்பெருமான். சிட்டன், சிரேஷ்டன், சிஷ்டாசாரமுடையவன் என்பருமான் உளர்.