பாடல் எண் : 1 - 9
வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.
9
பொ-ரை: மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர்களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்ளை விட்டு ஓடும். இஃது உண்மை.
கு-ரை: மேருவாகியவில். வட்டப்பட - அரைவட்டமாக அமைய. வாங்கி - வளைத்து. அவுணர் - திரிபுரத்தசுரர்கள். வல்லை வட்டம் மதில்; வல் - விரைவு, வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள். ஒல்லை - விரைவு. வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம்.