பாடல் எண் : 10 - 3
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.
3
பொ-ரை: அட்டமூர்த்தியாகிய எந்தையே! தீயவர் புரங்களைச் சுட்ட உயர்ந்த தேவரே! பட்டமாகக் கட்டிய சடைமுடியுள்ள பரமரே! செவ்வையாக இக்கதவினைத் திறப்பித் தருள்வீராக.
கு-ரை: அட்டமூர்த்தி - ஐம்பூதமும் ஞாயிறும் மதியும் உயிருமாகிய எண்வகை வடிவு. மூர்த்தியது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. அப்பர் - தந்தையானவர். துட்டர் - துஷ்டராகிய திரிபுரத்தசுரர். வான்புரம் - வானிலேபறக்கும் கோட்டை, சுட்ட - எரித்து அழித்த. சுவண்டர் - திருவெண்ணீறணிந்தவர்.
பட்டம் கட்டிய சென்னி - சடை முடியில் பிறை முதலியன தங்கியிருத்தல்தான் ஏகநாயகன் என்னும் பட்டத்தைக் காட்டுகின்றது என்பது கருத்து. பரமர் - மேலானவர். சட்ட - செவ்வையாக யாம் உம்மை நேரே காணும்படி.