பாடல் எண் : 100 - 2
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனும்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
2
பொ-ரை: மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்தி செய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதிசெய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ?
கு-ரை: தே என்று - தெய்வத்தன்மையுடையது என்று. பத்தி செய் - சுவர்க்கபோகங்களை அநுபவிக்க விரும்பிப் பக்தி செய்யும். மனப்பாறைகளுக்கு - பாறைபோன்ற கல் மனம் உடையவர்க்கு. ஏறுமோ - என்சொல் காதில் ஏறுமோ. அத்தன் - தலைவன். துத்தியம் செய - துதிக்க. துத்யம் - துதிக்கும்பாட்டு.