பாடல் எண் : 100 - 3
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.
3
பொ-ரை: நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.
கு-ரை: நூறுகோடி ஆறுகோடி என்பன - பல என்பதற்குச் சொல்லிய எண்ணிக்கை. நொந்தினார் (நுங்கினார் என்றும் பாடம்) - அழிந்தனர். ஆறுகோடி - பல. அங்ஙனே - அவ்வாறே அழிந்தனர். ஏறு - மிக்க. இந்திரன் கங்கை மணலை எண்ணில் எத்துணையாகுமோ அத்துணையோர் இறந்தனர். ஈறு இலாதவன் - அழிவு இல்லாதவன்.