பாடல் எண் : 100 - 4
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.
4
பொ-ரை: அறிவற்றவர்களே! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும், யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை.
கு-ரை: வாது - சொல்வாதம். மயங்கும் - பொய்யை மெய் என்று எண்ணும். ஏது சொல்லுவீராகிலும் - பொருந்தாத மொழிகளை உண்மை போலச் சொல்லுதல் முதலான எவ்வார்த்தைகளைச் சொல்லுபவர்கள் ஆனாலும். ஏழைகாள் - அறிவற்றவர்களே. யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம் மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே - "யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்னும் சித்தியார் வாக்கோடு ஒப்பிட்டுணர்க.