பாடல் எண் : 100 - 6
பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
6
பொ-ரை: பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும், வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும், தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும், தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள்.
கு-ரை: பேய்வனம் - இடுகாடு. ஈ வன் - ஈ பவன் என்பதன் இடைக்குறை. அடிச்சாய்வன் - அடியில் சாயப்பெற்றவன். சலவார்கள் - வஞ்சனையுடையவர்கள். உடல் சீவன் - உடலைச் சீவன் உண்ணின்றியக்குதல் போல அவர்களுக்குள் நின்று ஆட்கொள்ளுபவன்.