பாடல் எண் : 11 - 1
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
1
பொ-ரை: இந்நாள்வரை தோன்றிய கோயில்களும், இனித்தோன்றும் கோயில்களும், வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும், கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும்; காண்பீராக.
கு-ரை: தோற்றுங்கோயில் - பிறவினை தன்வினைப் பொருள்பட நின்றது. அன்றிப் பலரால் இனித் தோற்றப்படும் கோயில்கள் எனினும் அமையும். தோன்றியகோயில் - இதுவரை தோன்றியுள்ள சிவாலயங்கள், வேற்றுக்கோயில்கள் - சிவாலயங்களல்லாத ஏனைய தெய்வங்களின் கோயில்கள். பலவுள - இவை உலகில் பல உள்ளன. மீயச்சூர் இளங்கோயில் - மீயச்சூரில் பாலத்தாபனம் செய்துள்ள பாலாலயம். பாய்ந்த - இயமனைச் சினந்து காலால் உதைத்த. குளிர் புன்சடை - கங்கை தங்கியதால் குளிர்ந்த மெல்லிய சடையுடைய ஏற்றம் - உயர்வானது. பாலத்தாபனமாதல் பற்றிக் குறைவாக எண்ணுதல் வேண்டா என்றபடி. இதனால் வேற்றுக்கோயில்களில் அவரவர் விரும்பும் வடிவில் அருள்பவனும் சிவபிரானே என்றதும் ஆயிற்று.