பாடல் எண் : 11 - 3
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.
3
பொ-ரை: நெஞ்சமே! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும்,ஆனை அஞ்சுமாறு உரித்தவனும், அனல் ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்நினைப்பால் வாழ்வாய்.
கு-ரை: பஞ்சமந்திரம் - 'ஈசானஸ் ஸர்வவித்யாநாம்' எனத் தொடங்கும் ஐந்து மந்திரங்கள். ஓதும் பரமன் - அம்மந்திரங்களால் ஓதப்படும் முழுமுதல். ஆனை அஞ்ச உரித்து என மொழி மாற்றிப் பொருளுரைக்க. அனலாடுவார் - தீயேந்தி ஆடுபவர். நெஞ்சமே! நினைந்திரு. வாழி முன்னிலையசை. இதனால் மேற்குறித்த மந்திரங்கள் வேதங்களின் தெளிவாயுள்ளவை என்றதும் அவற்றால் இறைவனை வழிபடுக என்றதும் ஆயிற்று.