பாடல் எண் : 11 - 6
பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அக லாரிளங் கோயிலே.
6
பொ-ரை: திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிகொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது, பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் (கொடுக்கும்) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம்.
கு-ரை: பொன்னங்கொன்றையும் - பொன்னிறமுள்ள கொன்றை மலரும். பூவணிமாலையும் - பிற பூக்களால் அலங்கரித்துத் தொடுக்கப்பட்ட அழகிய மாலையும். பின்னும் - நெருங்கிய. சூடிற்று - சூடியது. மின்னுமேகலையாள் - ஒளிவிடும் மேகலாபரணம் அணிந்தவள். இன்னநாள் - இதுபோன்ற நாளிலும் கலாகருடணம் செய்துள்ள நாளிலும், அகலார் - நீங்காது எழுந்தருளியிருப்பவர். அகலார் சூடிற்று கொன்றையும் மாலையும் என இயைத்து வினை முடிவு செய்க. கொன்றைமாலை - திருவடையாளமாலை. ஓங்கார வாச்சியன், திருவைந்தெழுத்தின் பொருள் என்பதைக் காட்டுவது. ஏனையது அடியார் தொடுப்பது. சூடிற்று -தொழில்மேல் நின்றது.