பாடல் எண் : 12 - 1
கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.
1
பொ-ரை: மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன்; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான். இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே. (வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன், அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி.)
கு-ரை: கரைந்து - மனமுருகி; வாயைவிட்டுப் புகழ்ந்து பேசி என்றலும் ஒன்று. கைதொழுவார் - கையால் தொழுவார். காதலன் - அன்பு செய்வன். வரைந்து - (கடவுள் இல்லை என) நீக்கி. வைதெழுவார் - துயிலுணரும்போது இகழா நின்று எழும் புறச்சமயத்தார். வாடலன் - துன்பம் செய்யான். நிரந்த - வரிசையாக விளங்கும். பாரிடத்தோடு - பூதங்களோடு. தெய்வம் இல்லை என்பாரும் தன் மக்களே ஆதலின் தான் அவரை வாட்டாது தாமே நாளடைவில் உணர வைப்பன் என்றபடி. விரைந்து போவது - அன்பர் வழிபடும்போது நேர் பட நின்று வழிபாட்டை ஏற்றுக் கொள்ளுதல்.