|
பொ-ரை: நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும், சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு, வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர்; இதுவோ அவர்தம் அருள்! கு-ரை: சூழ்சடை - வளைத்து முடித்ததால் சூழ்ந்துள்ள சடை. நிலாமதி - நிலவையுடைய மதி. காண்டு - கூப்பிடுதூரம். சேவடி மேல் கூப்பிடுதூரம் கேட்கும்படி ஒலிக்கும் ஒரு கழல் உள்ளது என்க. உலாப்புறம் போந்த பெருமானைக்கண்டு அவன் திருவுருவ அழகில் மனங்கொடுத்த தையல் ஒருத்தி, அவன்தன் பக்கல் வாராது திருக்கோயிலுக்கு மீள்வது பொறாது இன்ன இயல்பினர் அவரை விரும்புவார் உள்ள வீதியுட்புகாது மீண்டும் மிழலைக்கே போவது ஆக உள்ளது என இரங்கியதாகக் கொள்க. |