பாடல் எண் : 13 - 1
என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.
1
பொ-ரை: என் உயர்ந்த பொருளே! தேவர் தொழுகின்ற கழலணிந்த நல்ல பொருளே! நலம் தீங்கு பகுத்து அறியும் அறிவு சிறிதும் இல்லாத இயல்பினேன் அடியேன்; எனது செம்பொன்னே! திருவீழிமிழலையுள் அன்பு வடிவாம் பெருமானே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: என்பொனே - எனக்குப் பொன்னாய் விளங்குபவனே. இமையோர் - கண்ணிமையாத தேவர்கள். தொழு - வணங்கும். பைங்கழல் - சிறந்த வீரக்கழல் அல்லது பசிய பொன்னால் ஆகிய கழல். நன்பொனே - மாற்றுயர்ந்து விளங்கும் பொன் போன்றவனே.
நலந்தீங்கு அறிவு ஒன்றிலேன் - நன்மை தீமை அறியும் அறிவு சிறிதும் இல்லாதவன். செம்பொனே - சிவந்த பொன்போலும் நிறமுடையவனே. "பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி" (தி.11.பொன்வண்ணத்தந்தாதி. பா.1) அன்பன் - அன்பே தானாய் விளங்குபவன். குறிக்கொள் - அடியேனை நினைந்து காத்தருள்க. ஏ - அசை.