பாடல் எண் : 13 - 10
ஒருத்தன் ஓங்கலைத் தாங்க லுற்றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.
10
பொ-ரை: ஓங்கிய திருக்கயிலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய இராவணனின் வலிகெட அவனை வருத்தியவனே! வஞ்சனை உடையோன் மனத்தின்கண் நிலை பெற்ற திருத்தியவனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் பொருள் வடிவாய் இருப்பவனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: ஒருத்தன் - தான் ஒருவனே பெரியோன் எனச்செருக்கியோன். ஓங்கல் - திருக்கயிலைமலை. தாங்கலுற்றான் - தாங்கிப் பெயர்க்க முயன்றவன். உரம் - வலிமை. வருத்தினாய் - துன்புறச்செய்தாய். வஞ்சனேன் - என் குறையைப் பிறர்க்குத் தெரியாதபடி மறைப்பவன். மனம் மன்னிய - மனத்தைக் கோயிலாகக் கொண்டு நிலைபெற்ற. திருத்தன் - அழகியன். அருத்தன் - பொருள் வடிவாக உள்ளோன்.