பாடல் எண் : 13 - 3
ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழும்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே.
3
பொ-ரை: உலகமே! விண்ணே! நன்மையே! தீமையே! காலமே! கருத்தே! கருத்தாற்றொழும் சீலமே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கோலமே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: நிலனும் வானும், நலமும் தீங்கும், இவையானைத்திற்கும் ஆதாரமாய் நின்று நிகழச் செய்கின்ற காலமும், எண்ணும் எண்ணமும், குறிக்கொண்டு தொழுதுவரும் நல்லொழுக்கமும் ஆகிய இவையனைத்துமாய் உள்ளவன் முதல்வன். சீலம் - இடையறவு படுதலின்றி நெறிப்பட்டு ஒழுகும் நல்லொழுக்கம். கோலம் - அழகியதிருவுரு, மணவாளக்கோலம்.